குட்டி இங்கிலாந்து நோக்கி படையெடுக்கும் மக்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இலங்கையின் குட்டி இங்கிலாந்து என வர்ணிக்கப்படும் நுவரெலியா நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இதனால் டெவோன் மற்றும் சென்கிளையார் காட்சி கூடங்களில் வாகனங்கள் நிறைந்து காணப்படுவதுடன் சுற்றுலா பயணிகளும் நீர்வீழ்ச்சிகளின் அழகினை இரசித்து வருகின்றனர்.
நுவரெலியா நோக்கி சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளமையினாலும், அவர்களின் பாதுகாப்பு கருதியும் நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்லும் ஒற்றயடி பாதை பாதுகாப்பு பிரிவினரால் மூடப்பட்டுள்ளன.
ஆபத்துக்களை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை
அதன்படி நீர்வீழ்ச்சிக்கு அருகில் சென்று பார்வையிடுவது மற்றும் நீர் நிலைகளில் நீராடுவது போன்ற விடங்களை தவிர்ப்பதன் மூலம் ஆபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பாதுகாப்பு பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேநேரம் நுவரெலியா மாட்டத்தில் உள்ள அதிகமான வீதிகள் வளைவுகள் நிறைந்து காணப்படுவதனாலும் மாலை வேளையில் மழை பெய்வதனாலும் அடிக்கடி பனிமூட்டம் ஏற்படுவதனாலும் இந்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் தமக்கே உரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என எச்சரித்துள்ளனர்.
இதேவேளை சுற்றுலா பிரயாணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றமையினால் நடை பாதை வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக நடை பாதை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.









