கொழும்பில் பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை - மர்ம நபர்களால் ஆபத்து
கொழும்பில் இருந்து திருகோணமலை, மொரவெவ வரை பயணித்த பேருந்தில் மர்ம நபர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பேருந்தில் அநுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் நிறுவனத்தின் முகாமையாளரிடம் இருந்த குடிநீர் போத்தலில் அதே பேருந்தில் பயணித்த நபர் போதை பொருள் கலந்துள்ளார். அத்துடன் அதனை குறித்த முகாமையாளரை குடிக்கவும் செய்துள்ளார்.
முகாமையாளர் மயக்கமடைந்தவுடன் அவர் அணிந்திருந்த 4 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர் அநுராதபுரம், விஜேபுர லெனின் மாவத்தையை சேர்ந்த 25 வயதுடைய இளைஞராகும். அவர் வத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றி வருகின்றார்.
குறித்த முகாமையாளர் கொழும்பு, புறக்கோட்டையில் இருந்து அநுராதபுரம் நோக்கி செல்வதற்காக சென்ற போது அவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட நபர் அருகிலேயே ஆசனம் பெற்றுள்ளார். இடையில் தேனீர் பருக சென்ற சந்தர்ப்பத்தில் குறித்த நபர் குடிநீர் போத்தல் ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் குடிப்பதற்கு நீர் தருமாறு கூறி போத்தலை பெற்றுக் கொண்டுள்ளார். போத்தலை வழங்கிவிட்டு முகாமையாளர் உறங்கியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் திடீரென எழுந்து நீர் போத்தலை சந்தேக நபரிடம் இருந்து பெற்று நீர் குடித்தவுடன் தனக்கு மயக்கம் போன்ற உணர்வு ஏற்பட்டதாக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மயக்க உணர்வு இல்லாமல் போன சந்தர்ப்பத்தில் தனது பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக குறித்த நபர் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு பேருந்துகளுக்கு வரும் நபர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



