உம்ரா பயணம் தொடர்பில் ஹஜ் செயலகம் விடுத்துள்ள எச்சரிக்கை
சவூதி அரேபியாவுக்கான விமானச் சேவைகளில் ஏற்படக்கூடிய சாத்தியமான தடங்கல்கள் மற்றும் பிராந்தியக் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, பதிவு செய்யப்பட்ட அனைத்து உம்ரா பயண ஏற்பாட்டாளர்களும் உடனடியாக எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயற்படுமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலங்கை ஹஜ் செயலகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகத்தால் அக்டோபர் 13, 2026 அன்று வெளியிடப்பட்ட பாதுகாப்பு ஆலோசனையைச் சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமானச் சேவைகள் தாமதமடையக்கூடிய சாத்தியக் கூறுகள்
உரிய முன்னெச்சரிக்கைகள் இன்றி சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட கணிசமான எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் தற்போது அங்கு கடுமையான அசௌகரியங்களையும் சிரமங்களையும் எதிர்நோக்கி வருவதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உம்ரா செல்லவிருக்கும் அனைத்து யாத்திரிகர்களுக்கும் பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட அல்லது தாமதமடையக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து முழுமையாக தெளிவுபடுத்த வேண்டும்.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் அவசர காலங்களுக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதன் அவசியத்தை முகவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தநிலையில்,அரசாங்கத்தின் ஆலோசனைகளையும் தற்போதைய சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளாமல் பயண ஏற்பாடுகளைச் செய்யும் முகவர்களே, அதனால் ஏற்படும் எந்தவொரு அபாயங்கள், இழப்புகள் அல்லது சட்டரீதியான விளைவுகளுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.

அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதால் ஏற்படும் எந்தவொரு நட்டங்களுக்கும் அல்லது சிரமங்களுக்கும்¸ சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு, இலங்கை ஹஜ் மின்ஹஜ் மற்றும் உம்ரா குழு மற்றும் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன உத்தியோகபூர்வ பொறுப்பேற்காது என்றும் ஹஜ் செயலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் உம்ரா யாத்திரிகர்களது, பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக, அனைத்துப் பயண முகவர்களும் இந்த அறிவித்தலை மிகக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.