உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்! இரண்டு வயது குழந்தை உட்பட 8பேர் பலி
உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள ஸ்லோவியன்ஸ்க் மீது ரஷ்ய ஷெல் தாக்குதலில் இரண்டு வயது குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நகரின் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 21 பேர் காயமடைந்துள்ளதாக ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். மேலும் பலரைக் காணவில்லை என்றும், அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி கண்டனம்
இத் தாக்குதல் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு மிருகத்தனமான மற்றும் தீய தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் இரண்டு வயது குழந்தை ஒன்றும் அடங்குவதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது நோயாளர் காவு வண்டியில் இறந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நில மோதல்
இக் குண்டுவெடிப்புகளில் வணிகங்கள் மற்றும் கடைகளும் சேதமடைந்ததாகவும், ஐந்து வீடுகள் மற்றும் ஐந்து அடுக்கு மாடி குடியிருப்புகள் தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டொனெட்ஸ்த் பிராந்தியத்தில் உள்ள முக்கிய பகுதியான பக்முத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதியில் 80 சதவீதம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நில மோதல் உக்ரைன்-ரஷ்யாவின் போர் என்று கூறப்படுகிறது.