நிபந்தனைகள் இன்றி ஆயிரம் ரூபா வேண்டும் - தொழிலாளர்கள் தெரிவிப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்காகப் போராடிய தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றுக்கும், சம்பள உயர்வைச் சம்பள நிர்ணய சபை ஊடாகவேனும் நிர்ணயித்து வழங்குவதற்கு முன்வந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
தமக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்றனர்.
6 ஆண்டுகளுக்கு பிறகே அவர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் வேலை நாட்கள் குறைக்கப்படாமல், தொழில் சுமைகள் அதிகரிக்கப்படாமல்தான் தமக்கு இந்த சம்பள உயர்வு வேண்டும் எனத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அத்துடன், தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு அது தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதேவேளை, ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு வேலை நாட்களில் கை வைத்தால் அதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.



