கை கழுவச் சென்ற செஹன்ஸா திரும்பி வரவேயில்லை! துயரங்களின் முழு சாட்சியமாய் மாறியதேன்..(Video)
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் குடிநீர் இணைப்பு பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயதேயான செஹன்சா தன்னுயிர் ஈந்து இந்த உலகத்திற்கு விடைகொடுத்தார்.
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்றையதினம், குடிநீர் குழாய் பொறுத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுமி உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மிகப்பெரிய துயரம் என்னவெனில், உயிரிழந்த சிறுமி செஹன்சாவின் பிறந்தநாளும் நேற்றுதான். தாய் வெளிநாட்டில், தனது பாட்டி மற்றும் சித்தியின் பராமரிப்பில் அந்த சிறுமி இதுவரையான நாட்களும் வாழ்ந்து வந்துள்ளார்.
வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை
தாய் வெளிநாட்டில்
நேற்றையதினம், தனது பிறந்தநாளையொட்டி பல்வேறு கனவுகளுடன் பாடசாலைக்குச் சென்ற சிறுமி, அன்று தனக்கு ஏற்படவிருந்த விபரீதத்தை அறிந்திருக்கவில்லை.
உணவு இடைவேளையில் கை கழுவச் சென்ற செஹஸ்னா, திரும்பி வரவே முடியாத இடத்திற்குச் சென்று விட்டதை அறிந்த ஒவ்வொருவரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
அவரது தாயார் தினமும் தொலைபேசியின் ஊடாக அழைப்பெடுத்து சிறுமியுடன் கதைத்து வந்ததாக உயிரிழந்த சிறுமியின் சித்தி தெரிவித்துள்ளார்.
தனது மகள் மீண்டு வரப் போவதில்லை என்பதை அறிந்த அந்த தாயின் துயர நிலை எத்தனை வேதனைக்குரியது.
உண்மையில், இந்த சிறுமியின் மரணத்திற்கும், படுகாயமடைந்த ஏனைய ஐவரின் பரிதாப நிலைக்கும் பதில் சொல்ல வேண்டியவர் யார்.
பெருமளவான சிறுவர்கள் கல்வி கற்கின்ற குறித்த பாடசாலையில், அதிகமாக சிறிய வயதுடைய பிள்ளைகள் பயன்படுத்தும் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டிருக்கும் சுவர் இடிந்து விழும் வரை கவனயீனமாக இருந்தது யாருடைய தவறு என்பதே தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
நிச்சயமாக, திடீரென ஒரு அனர்த்தம் நேர்ந்து அந்த சுவர் இடிந்து விழுந்திருக்க வாய்ப்பில்லை, இதற்கு முன்னர் பார்ப்பவர்களால் அவதானிக்கப்படக் கூடிய அபாய நிலை காணப்பட்டிருக்கும் மற்றும் அவதானிக்கப்பட்டிருக்கும்.
இருந்தும், அவை கண்டுகொள்ளப்படவில்லை. இதன் விளைவு, வாழ்வின் தொடக்கத்தை ஆரம்பித்த ஒரு இளம் மொட்டு மலரும் முன்னரே மரணித்துப் போனது.
விபத்து இடம்பெற்று முடிந்த பின்னர், பாடசாலை மாணவர்களது பெற்றோர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களால் பாடசாலையின் அதிபர் தாக்கப்பட்டுள்ளார். பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விசாரணை செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க, இது போன்று எத்தனை பாடசாலைகளில் அபாய நிலைகள் காணப்படும், அவை இதற்கு பிறகாவது திருத்தியமைக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.
செஹன்சாவின் மரணத்தை ஒரு படிப்பினையாகக் கொண்டு பாடசாலைகளில் இருக்கும் இதுபோன்ற இடங்கள் திருத்தியமைக்கப்படும் என நம்புவோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |