வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று(16) இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த பாடசாலையில், நீர்க்குழாய் பொருத்தப்பட்டிருந்த மதில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மாணவி உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நேற்றையதினம் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவத்தின் பின்னர் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களது பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பாடசாலையின் அதிபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |