விளையாட்டுகளில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் புதிய பட்டியல் வெளியானது! அமைச்சர் நாமல்
உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் (WADA) தயாரிக்கும் விளையாட்டுகளில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் புதிய பட்டியலுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட உள்ளது.
பல்வேறு விளையாட்டுக்களுக்காக 2021ம் ஆண்டில் உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் (WADA) அறிமுகப்படுத்திய தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலின் உத்தியோகபூர்வ அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விளையாட்டு துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்றுநடைபெற்ற இளைஞர் மற்றும் விளையாட்டு தொடர்பான அமைச்சர் ஆலோசனைக் குழு கூட்டத்தில் அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு திட்டம் ஆண்டுதோறும் பல்வேறு விளையாட்டுகளுக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை வெளியிடுகிறது.
தங்கள் திறமைகளை மேம்படுத்த இந்த பொருள்களை அறிந்தோ, அறியாமலோ பயன்படுத்தும் விளையாட்டு நபர்கள் அந்த நிகழ்விலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அல்லது வேறு வகையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
இதன்படி, விரிவான ஆலோசனை செயல்முறையைத் தொடர்ந்து ஆண்டுதோறும் உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தினால் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.