வவுனியாவில் வியாபார நிலையத்தில் இருந்து மீட்கப்பட்ட வாக்காளர் அட்டைகள்!
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளரின் சகோதரனின் வியாபார நிலையம் ஒன்றில் இருந்து ஒரு தொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வியாபார நிலையத்தின் உரிமையாளரும் தபால் ஊழியர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் ஒரு தொகை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகள் இருப்பதாக தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
வாக்காளர் அட்டை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து ஒரு தொகை வாக்காளர் அட்டைகளை மீட்டுள்ளனர்.
அதனை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக குறித்த வட்டாரத்தில் ஆளும் கட்சியில் போட்டியிடும் வேட்பாளரின் சகோதரனான வியாபார நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன், அந்தப் பகுதிக்குரிய தபால் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |