மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 17 கிராமங்களுக்குமான களவிஜயம்
இலங்கை ஜனாதிபதியின் (Gotabaya Rajapaksa) சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைவாக பிரதமரின் வழிகாட்டுதலில், நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்சவினால் (Basil Rajapaksa), இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 3 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 17 கிராமங்களுக்குமான கள விஜயம் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனினால் (Angajan Ramanathan) நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்விஜயத்தில் கிராமங்களுக்கான உட்கட்டுமானம், வாழ்வாதாரம், சூழலியல், மற்றும் கடலோர பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இவ்விஜயத்தில் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலக அதிகாரிகள், மருதங்கேணி பிரதேச இணைப்பாளர் மற்றும் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.