விதிகளை மீறுபவர்களுக்கு 800 பவுண்ட்ஸ் அபராதம்! பிரித்தானியாவில் அமுலாகும் சட்டம்
பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட நபர்களுடன் ஹவுஸ் பார்ட்டிகளை ஏற்பாடு செய்து கலந்துகொள்பவர்களுக்கு 800 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
இது அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸ் விதி மீறிகளைத் தடுக்க உள்துறை செயலாளர் பிரிதி படேல் அறிவித்த நடவடிக்கையில், அடுத்தடுத்த ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சம், 4 6,400 பவுண்டஸ் வரை அபராதம் இரட்டிப்பாகும்.
டவுனிங் வீதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“பொறுப்பற்ற நடத்தை பொது சுகாதாரத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, வருகை தருபவர்களுக்கு மட்டுமல்ல, எங்கள் அருமையான பொலிஸ் அதிகாரிகளுக்கும்.
"ஒரு சிறிய எண்ணிக்கையிலான நபர்கள் மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்தும்போது நாங்கள் அதனை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்."
பிரித்தானியாவில் இன்று மேலும் 1290 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 94,580 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தேசிய காவல்துறைத் கவுன்சிலின் தலைவரான மார்ட்டின் ஹெவிட், கிழக்கு லண்டனில் உள்ள ஒரு பகுதியில் ஹவுஸ் பார்ட்டி உட்பட, விதிமுறை மீறல்களுக்கு உதாரணங்களை காட்டினார்.
ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் இடம்பெற்ற ஹவுஸ் பார்ட்டி ஒன்றிம் சுமார் 150 பேர் வரையில் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட இடங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கூட்டங்கள் வைரஸ் பரவலை தூண்டும் என மார்ட்டின் ஹெவிட் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இப்போது வரை, ஹவுஸ் பார்ட்டிகள் உள்ளிட்ட சட்டவிரோத வெகுஜனக் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களுக்கு மட்டுமே 10,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கப்படுகிறது.
எனினும், அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய அபராதம் இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.