பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமை மீறல்கள்: அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம்
மலையக பெருந்தோட்ட அதிகாரிகளால் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (06.06.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மனித உரிமைகள் மீறல் சம்பவங்கள்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அண்மை காலமாக மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தோட்ட அதிகாரிகளால் தாக்கப்படுவதும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதும் அதிகரித்துள்ளன.
இது அடிமை நோக்கு நிலை நின்று சட்டங்களை தமதாக்கி செயல்படும் கொடூர செயற்பாடு என்பதோடு இது அதிகார பேரினவாதம் என்று கூறல் வேண்டும்.
இதனை வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக நிறுவனங்கள் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றும் கேட்கின்றோம்.
இத்தகைய சம்பவங்களின் போது உடனடியாக ஊடகங்கள் சகிதம் களத்திற்கு விரையும் மலையக அரசியல்வாதிகளின் செயல்பாடு அரசியல் நாகரீகத்தினை கேளிக்கூத்தாக்குவதாகவே உள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு உரிமையை வெளியிலும் பயன்படுத்தி வில்லனைப் போன்று செயற்படுவதும், வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளவதற்காகவே என்பதையும் மக்கள் அறிவர்.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் எடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் உரிமை மீறலுக்கு காரணமானவர்களை விசாரணைக்கு உட்படுத்தி நிர்வாக ரீதியிலும், சட்ட ரீதியிலும் தண்டிக்கப்பட வேண்டும்.
தாமே பழைமையான தொழிற்சங்கம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எமக்கு பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக வாக்களித்து எம்மையே நாடாளுமன்றத்திற்கும், உள்ளுராட்சியை சபைகளுக்கும் அனுப்புகின்றனர் என தம்பட்டம் அடித்துக் கொண்டும் செயல்படும் தொழிற்சங்க மற்றும் கட்சி அரசியல்வாதிகள் அந்தமக்களை அரசியல் சமூகமாக்காது வைத்துள்ளன.இதுவும் அடிமைத்தன சிந்தனை எனலாம்.
அறியாமையுடைய தொழிலாளர்கள்
எத்தனை தொழிற்சங்கங்கள் வருடம் தோறும் பொதுக் கூட்டங்களை நடத்தி புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஊக்கமளித்து பதவிகள் கொடுத்து தொழிற்சங்க அறிவை வளர்க்கவும் தொழில் உரிமைக்காக பாதுகாப்பதற்காகவா பயிற்சிகளையும் கல்வி அறிவு வழங்குகின்றனர்.
அவ்வாறு செய்திருந்தால் தொழிலாளர்களுக்கு எதிரான அதிகாரிகள் உரிமைகள் மீறுகின்ற போது அவர்களே நீதிக்கான முடிவெடுப்பர்.
அத்தகைய நிலையை உருவாக்குவதற்காக தாமே களத்தில் தோன்றுவது என்பது தனி நபர் வழிபாட்டை ஊக்குவிப்பதாகவே அமையும். இதுவே காலாகாலமாக நடந்தும் வருகின்றது.
தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைவர்கள் தாமே பெற்றுக் கொடுத்ததாக கூறும் சம்பள இலக்கங்களுக்கும், காணி இலக்கங்களுக்கும் பட்டாசு கொளுத்தி பால் சோறும் இனிப்பும் பகிர்ந்து தலைவர்களுக்கு புகழ் மாலை சூட வைக்கும் கலாசாரத்தில் இருந்து விடுவிப்பதற்கு தயாரில்லை என்பதும் இன்னொரு வகையில் அடிமை நிலையே.
நிறுவனங்கள் தமது உயர் அதிகாரிகளுக்கு சம்பளத்தையும், சலுகைகளையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு தொழிலாளர்களின் உழைப்பிற்கும் வாழ்வுக்குமான சம்பளத்தை கொடுக்க மறுப்பதும் வறுமைக்குள்ளும் போசாக்கின்மைக்குள்ளும் தள்ளுவது கொலைக்கு ஒப்பாகும். இதற்கும் இடம் அளிக்க முடியாது.
ரூபா 1700 சம்பளம் கொடுக்க முடியாதவர்கள் நிறுவனத்தை மீள அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்.
அவற்றை வேறு நிறுவனங்களிடம் கொடுப்போம் எனும் அரசியல்வாதிகளில் கொக்கரிப்பு அறியாமையுடைய தொழிலாளர்களுக்கு மகிழ்வாக இருக்கலாம்.
வேறு நிறுவனங்களுக்கு கொடுப்பது என்பது தொடர்ந்தும் தொழில் அடிமைகளாக தள்ளுவதற்கு எத்தனிக்கும் செயல் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வேறு நிறுவனங்கள் என்பது யார்? இந்திய நிறுவனங்களுக்கா? அல்லது சீன நிறுவனங்களுக்கா? இரண்டும் இணைந்த கூட்டு நிறுவனங்களுக்கா?
பூகோள அரசியலுக்குள் சிக்கியிருக்கின்ற இலங்கை அரசும் அரசாங்கமும் இனிவரும் காலங்களில் மலையகத்தையும் அந்நிய அரசியல் சக்திகளுக்கு அடகு வைக்கப் போகின்றது.
அதற்காகவே மலையக அரசியல்வாதிகள் காவடி தூக்கிக்கொண்டு வீதி வழியே நாடகமாடுகின்றனர். இதுவும் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
மலையகத்தை தேசமாக்குவதற்காக பல லட்சம் பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
அதனை தாய் நிலமாக நேசித்து அந்த மண்ணுக்கு உரமானோர் ஆயிரக்கணக்கானோராவர். அவர்களின் வழி வந்தவர்களுக்கே அந்த மண் சொந்தமாக வேண்டும்.
தற்போது தோட்டங்களில் தொழில் புரியும் மற்றும் புரிய விரும்பும் மலையக மக்களுக்கு அவரவர் இயல்புக்கேற்ப தோட்டக்காணிகளை உற்பத்திக்காகவும் வீடமைப்புக்காகவும் பகிர்ந்து கொடுத்து நில உரிமையாளர் களாக்க வேண்டும்.
அதற்கான குரலை மலையக சமூக அமைப்புக்கள் உயர்த்திக் கொண்டிருக்கையில் மலையக அரசியல் தலைமைகள் பதவிகளையும் சலுகைகளையும் புறந்தள்ளி மலையக மக்கள் அடையாளம் இழக்காது வாழ கூட்டு செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |