தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதை தடுக்க கோரி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதை தடுக்குமாறு கோரி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
மனுதாரர்கள் ஏ.எம்.ஏ.நிஷாந்த, பி.எம்.ஆர்.பெர்னாண்டோ மற்றும் ஜே.ஏ.டி.எப்.பிரியந்த ஆகிய மூவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மனு தாக்கல்
சட்டமா அதிபர், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டு இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு, இலங்கை பொலிஸில் பணியாற்றும் ஏராளமான அரச அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான அலட்சியம் மற்றும் குறைபாடுகளை கண்டறிந்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை
ஆத்துடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அந்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பின் பிரகாரம், அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதிக்கு அங்கீகாரம் வழங்குவதைத் தடுக்கும் உத்தரவை மனுதாரர்கள் நீதிமன்றிடம் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |