இந்திய முதலீட்டாளர்களுடன் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் புன்னக்குடாவிற்கு விஜயம்
மட்டக்களப்பு – ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்டப்பட் புன்னக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுவரும் தொழில்வாய்புக்களை ஏற்படுத்தும் முதலீட்டு வலயத்தை(கைத்தொழில் பூங்கா) இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் , பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய முதலீட்டாளர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
புன்னக்குடா பகுதியில் 265ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய கைத்தொழில் பூங்கா நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில், வேலைகளை அவதானித்து இடங்களையும் இன்று பி.ப 01.00 மணியளவில் பார்வையிட்டுள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,
புன்னக்குடா பகுதியில் 265ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய கைத்தொழில் பூங்கா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பல முதலீட்டாளர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ச்சியாக நாம் முதலீட்டாளர்களுடன் சந்திப்பை ஏற்படுத்தி வருகின்றோம்.
கடந்தவாரம் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் சில இந்திய முதலீட்டாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களையும் இந்த முதலீட்டு வலயத்தில் முதலீடு செய்யுமாறு கோரியுள்ளோம்.
இதன் மூலம் எமது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெறமுடியும். கடந்த அரசில் நாம் மூடியுள்ள தொழிற்சாலையையாவது திறங்கள் என நாடாளுமன்றத்தில் பேசினோம், பல கலந்துரையாடல்களை மேற்கொண்டோம், எல்லாம் காற்றில் பறக்கவிட்ட செய்தியாகவே உள்ளது. முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் தமது முதலீடுகளைச் செய்யமுடியும்.
படுவான் கரையிலும் இவ்வாறான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். எங்களுக்கு ஜனாதிபதி அரசாங்கம் அமைச்சர்கள் போதியளவு ஆதரவை வழங்குகின்றனர்.
போக்குவரத்து வசதிகைளை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றோம். வருகின்ற முதலீட்டாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற வேலைகள் வருகின்ற வருடம் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனத் தெரிவித்துள்ளார்.









