சற்று முன்னர் விகாரமகாதேவி பூங்காவில் ஏற்பட்ட பதற்றநிலை.. கடுமையாக எச்சரிக்கும் கஸ்ஸப்ப
விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலையை தொடர்ந்து, பலாங்கொட கஸ்ஸப தேரர் அரசாங்கத்திற்கும் கொழும்பு மாநகரசபைக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நாட்டிலும் சர்வதேச அளவிலும் பௌத்த பிக்குகள் தலைமையில் பல்வேறு அமைதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஞானசார தேரரின் நிபந்தனையற்ற விடுதலையை வலியுறுத்தியே இந்த அகண்ட சத்யாகிரகம் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை முயற்சிகள்
பல நாட்களாக அமைதியான முறையில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் வன்முறைகளைத் தூண்ட முயற்சிகள் நடந்தபோதிலும், அவை வெற்றிகரமாகத் தடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எனினும், போராட்டக் களத்தில் பிக்குகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வேளையில், மேயர் மற்றும் மாநகரசபை ஆணையாளரின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத குழுவினர் வந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டத்தரணிகளும் சிவில் அமைப்பாளர்களும் அடையாள அட்டையைக் கேட்டபோது அவர்களால் எதையும் சமர்ப்பிக்க முடியவில்லையெனவும், இத்தகைய அடாவடிச் செயல்கள் மூலம் அமைதியான சத்யாகிரகப் போராட்டத்தை ஒருபோதும் நிறுத்திவிட முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பின் படி பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் வழங்கப்பட வேண்டும் என்றும், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்து போற்றி வளர்ப்பது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்ட கஸ்ஸப தேரர், அரசுக்குச் சொந்தமான மாநகரசபை இத்தகைய பௌத்த சாசனப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஈழக் கோரிக்கை ஆதரவாளர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் அரசு! நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய ஆபத்தென எச்சரிக்கை