சூடுபிடித்துள்ள ஞானசார தேரர் விவகாரம் : விகார மகாதேவி பூங்காவில் முகாமிட்டுள்ள தேரர்கள்
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி பௌத்த தேரர்கள் குழுவொன்று கொழும்பு விஹார மஹா தேவி பூங்காவில் தங்களது போராட்டத்தை தற்போது வரை (17) தொடர்கின்றனர்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி, மகா சங்கத்தினரின் தலைமையில் காவி ஆடைக்கு நீதி - சுதந்திர நடைபயணம் கடந்த 10 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
பொலிஸாருடன் முரண்பாடு
இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று (16) நண்பகல் வரை தங்கியிருந்த பிக்குகள் குழுவினர், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில், கொழும்பு விஹார மஹா தேவி பூங்காவில் தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர்.
எனினும், ஞானசார தேரர் விடுவிக்கப்படும் வரை அவ்விடத்தை விட்டு அகலப்போவதில்லை என தித்தகல்லே ஆனந்தசிரி தேரர் அங்கு தெரிவித்துள்ளார்.
நேற்று விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பிக்குகள் குழுவினர், இரவில் மேடை ஒன்றை அமைக்க முற்பட்ட போது பொலிஸாருடன் முரண்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதற்காகவும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.