தமிழ் தேசியம் என்பது இனவாதமா! விக்னேஸ்வரன் விளக்கம்
தமிழ்த் தேசியம் இனவாதம் அன்று எனவும் அது வரலாற்று ரீதியான உண்மையை நடைமுறைப்படுத்த விழைவது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“வடக்கு, கிழக்கு மக்கள் தமிழ்ப் பேசும் மக்கள். அவர்களுக்கு அடையாளப்படுத்தக்கூடிய வாழ்விடங்களும் கலை கலாசாரமும் உண்டு. அவர்கள் சட்டப்படி ஒரு தேச மக்கள். அவர்களுக்கான அரசியல் தீர்வாக கருதப்படும் 13ஆவது திருத்தச்சட்டம் அதிகாரப் பகிர்வு பற்றி எதையும் கூறவில்லை.
தற்போதைய அரசாங்கம்
அது முற்றிலும் பரவலாக்கம் பற்றியே பேசுகின்றது. அது தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொள்ளவுமில்லை. அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தவுமில்லை. 13ஆவது திருத்தச் சட்டம் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டதாக எந்தத் தருணத்திலும் கொள்ளமுடியாது.
தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்கள் விட்ட நிர்வாக, செயலாட்சி, மேலாண்மை சிக்கல்களை நீக்க முன்வந்துள்ளது. சில திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் உள்ளது.
அந்த சிக்கல்களை இருக்கும் ஒற்றையாட்சி அமைப்பின் கீழேயே நடைமுறைப்படுத்தப் பார்க்கின்றது அரசாங்கம். அவ்வாறு நடைமுறைப்படுத்துவது தமிழ்த் தேசியத்தையோ அதிகாரப் பகிர்வையோ உறுதி செய்யாது.
நடைமுறைச் சிக்கல்கள்
ஒற்றையாட்சி முறைமை நீங்கி கூட்டு சமஷ்டி முறைமை அறிமுகப்படுத்தும் வரை இவ்வாறான நடவடிக்கைகள் தமிழர்களின் அன்றைய வாழ்வில் சில சலுகைகளை கொடுத்துதவுவன அல்லது அவர்கள் வாழ்க்கை முறையில் சில நன்மைகளை உட்புகுத்துவன. அவ்வளவுதான்.
ஆனால், ஒற்றையாட்சி முறைமையானது பெரும்பான்மை மக்களின் பிடிக்குள் மற்றைய மக்கட் கூட்டங்களை பலாத்காரமாக வைத்திருக்கக்கூடிய ஒரு முறைமை. காலக்கிரமத்தில் அந்த மக்கட் கூட்டங்களைத் தம் வழிக்கு மாற்றக் கூடிய வல்லமை பெற்றது ஒற்றையாட்சி.
ஆகவே, கூட்டு சமஷ்டி முறை அல்லது முற்றான சுயாட்சி முறைமை வடக்கு கிழக்கிற்குக் கிடைக்கும் வரையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், அதிகாரப் பரவலாக்கம் மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் களைவது என்பன ஒரு தற்காலிக சலுகை முறையே” என விளக்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |