வடக்கு - கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டங்கள் (photos)
யாழ் - வுரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களினால் பாடசாலை நுழைவாயிலை மறித்து நேற்று (03.01.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
மருந்து தட்டுப்பாடை நிவர்த்தி செய்யக்கோரி முல்லைத்தீவு - மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (04.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் சிகிச்சை பெறுவதற்காக சென்றும் மருந்து இல்லாத காரணத்தினால் திருப்பி அனுப்பப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை சரியான வைத்தியர் இல்லாத நிலை மூங்கில் ஆறு பிரதேச மருத்துவமனை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைக்கு கண்டனம் தெரிவித்து பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கீதன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட சவுக்கடி பகுதியில் சட்டவிரோதமாக அரச காணிகளை சில நபர்கள் கையகப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் பிரதேச செயலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று பின்னர் அங்கிருந்து மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை கோசங்களை எழுப்பியவாறு சென்று, காணி அபகரிப்பு தொடர்பாக பிரதேச செயலாளரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதன்போது காணி அபகரிப்புக்கு எதிராக உரிய தீர்வினை தற்போதைய வழங்க வேண்டும் என கோரி பிரதேச செயலாளருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.