வடக்கின் பல பகுதிகளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு (Photos)
யாழில் அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும், மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக இன்று (17.01.2023) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத் துறை சார்ந்தவர்கள், சட்ட மருத்துவ அதிகாரிகள், வங்கிகளின் தொழிற்சங்க அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (17.01.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களாக குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் இல்லாத நிலையில் நிரந்தர அதிபர் ஒருவரை நியமிக்க கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் "உடன் தீர்வு இல்லையெனில் போராட்டம் வலுப்பெறும், எங்கே எங்கே எமது பாடசாலை அதிபர் எங்கே, தரமுயர்ந்த பாடசாலை தரமான அதிபர் வேண்டும், துணுக்காய் கல்வி வலயம் அதிபர் இல்லாத 1AB பாடசாலையா, அருகில் வலயம் அனாதையாக பாடசாலை போன்ற சுலோகங்கங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: கீதன்
வவுனியா
வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (17.01.2023) ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தன்னிச்சையான அசாதாரண வரி திருத்தத்தை உடனடியாக மீளப்பெறு, மருந்து இல்லை சுகாதார கட்டமைப்பும் சீர் குலைந்துள்ளது, சத்திர சிகிச்சைகளும் இல்லை மருந்துகளும் இல்லை என்ற பதாதைகளை ஏந்தியவாரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: ஷான்
மன்னார்
மன்னாரில் நேசக்கரம் பிரஜைகள் குழு மற்றும் மன்னார் மாவட்ட கடற்தொழில் ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று (17.01.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் மக்களைப் பாதிக்கும் வள சுரண்டல்கள், காணி அபகரிப்புக்கள், கடற்பரப்புக்களை தனியார் வசப்படுத்தல் போன்ற செயற்பாடுகளைக் கண்டித்தும், சமத்துவத்தையும் நிலை நிறுத்தக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை தொடர்ந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று தமது கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கடற்தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ஆஷிக்
திருகோணமலை
அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியசாலை வைத்தியர்கள் ஒன்றிணைந்து நேற்று (17.01.2023) திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் ஊழியத்தில் கை வைக்காதே, வான் உயரத்தில் பணவீக்கம் நடுவீதியில் உத்தியோகத்தர்கள், வழங்கு வழங்கு நோயாளர்களுக்கு மருந்தை வழங்கு போன்ற பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் செந்தூரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மருந்து தட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அதிகளவில் கஷ்டமான நோயாளர்கள் அரச வைத்தியசாலைகளை நம்பி சிகிச்சைகளுக்காக வருவதாகவும் அரசாங்கத்தினால் வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்து வகைகளை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையில் அதிக அளவிலான மரணங்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
செய்தி: பதூர்தீன் ஷியானா
மட்டக்களப்பு
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்கோரியும், புதிய வரிக்கொள்கையினை மீளப்பெறக்கோரியும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று (17.01.2023) மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆட்சியாளர்களே அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துகள் மற்றும் உபகரண தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கவும், வான் உயர பணவீக்கம் நடுவீதியில் உத்தியோகத்தர்கள்,சுகாதாரதிற்கான ஒதுக்கீட்டில் கைவைக்காதே,நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில், இலசவ சுகாதாரம் இல்லாதொழிக்கப்படுகின்றது போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவானது இரவு 10.00மணி வரையும் சேவையினை வழங்கும்போதும் அங்கு சிகிச்சைபெறுவதற்காக வரும் நோயாளிகளுக்கு மருத்து வழங்குவதில் பாரிய தட்டுப்பாடுகள் நிலவுவதாக இங்கு வைத்தியர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் வைத்தியசாலையில் குணமாக்கமுடியாத நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நோயாளர்கள் பாரிய கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அரச வைத்தியசாலைகளை மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களே நாடி வரும் நிலையில் அவர்கள் கடும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: குமார்



போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
