திருகோணமலையில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் அதிரடி கைது
திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த ஒக்டோபர் 07, 2025 அன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவர் நேற்று (28.10.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து, குற்றவாளிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று குறித்த இருவரும் பொலிஸாரின் பிடியில் சிக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை குறித்த சம்பவம் தொடர்பிலும், குறிப்பாகப் பாடசாலை முடிகின்ற நேரங்களில் மாணவர்களுடைய பாதுகாப்பு தொடர்பிலும் ஆராயும் முகமாக, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குமாரசிங்க உள்ளிட்டோர் ஒக்டோபர் 14, 2025 அன்று பாடசாலைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
தீவிர கண்காணிப்பு
அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து, வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டிருந்தனர்.

அந்தவகையில், இன்று குறித்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் முச்சக்கர வண்டியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
அதுமட்டுமல்லாமல், மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்காக சில கண்காணிப்பு மற்றும் தகவல் திரட்டும் நடவடிக்கைகளும் பிரதேசத்தில் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனவே, பாடசாலை விடுகின்ற நேரங்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் அப்பகுதிகளில் அலைந்து திரிவதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வன்முறைக் குற்றவாளிகளுக்கு எதிராகப் பொலிஸாரின் நடவடிக்கை தொடரும் எனவும், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |