காலம் காலமாக ஏமாற்றப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் மலையக மக்கள்: விடிவெள்ளி மகளிர் அமைப்பு குற்றச்சாட்டு
எமது மக்கள் பிரதிநிதிகளால் நாம் காலம் காலமாக ஏமாற்றப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளோம் என விடிவெள்ளி மகளிர் அமைப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஹட்டனில் நேற்று (23.02.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள்
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினைத் தொடர்ந்து மலையகப்பகுதியில் குடும்ப பொருளாதாரம் பாரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
பல குடும்பங்கள் அன்றாட உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர்.
காலம் காலமாக எமது அரசியல் தலைவர்கள் தேர்தல் வரும்போது உங்களுக்கு வீட்டுரிமை பெற்றுத்தருகிறோம், காணியுரிமை பெற்றுத்தருகிறோம், 100 பேருக்கு தொழில்வாய்ப்பு 500 பேருக்கு சுயதொழில், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொடுப்போம் என்றெல்லாம் சொல்லி எம்மை காலம் காலமாக ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.
ஆனால் எத்தனை பேருக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். கேட்டால் இப்போது எங்கள் கட்சி ஆட்சியில் இல்லை. ஆட்சியில் இருந்தால் உங்கள் பிரதேசம் இந்த வேலைத்திட்டத்திற்கு அடங்கவில்லை என்றெல்லாம் தெரிவிக்கிறார்கள்.
மலையகப் பெண்கள்
இனியும் நாம் ஏமாற தயாரில்லை. தேர்தலுக்கு வருவதற்கு முன் எங்களுக்கு உரிமைகளையும் பொருளாதாராத்துக்கு தீர்வினையும் பெற்றுக் கொடுத்து விட்டு வாருங்கள். அப்போது வாக்களிப்பதைப் பற்றி யோசிப்போம்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் 35000 ஹெக்டேயர் தரிசு நிலங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்கள். ஏன் அந்த தரிசு நிலங்களை மலையகப் பெண்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு பயன்படுத்தக்கூடாது.
இதேநேரம் எதிர்வரும் 8ஆம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. ஒருநாள் நினைவுகூர்ந்து விட்டு வாழ்நாள் முழுவதும் அழும் நிலையில் மலையகப்பகுதிகள் இன்றும் காணப்படுகின்றன.ஆகவே, இந்நிலை மாற வேண்டும்.
மேலும், மலையகத்தில் இருக்கின்ற குடும்பங்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமென்றால் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சரியான வேலைத்திட்டங்களை மக்கள் பிரதிநிதிகள் இந்த மகளிர் தினத்தில் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர்களுக்கு எதிராக பெண்கள் அணிதிரள்வது எவராலும் தடுக்கமுடியாது எனவும் எதிர்வரும் காலங்களில் வாக்களிப்பதையும் தவிர்க்கப் போவதாகவும் விடிவெள்ளி மகளிர் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.