சர்வதேச நாணய நிதியம்- உலக வங்கி வருடாந்த மாநாட்டில் இலங்கையின் பிரபல ஆய்வு நிறுவனம் பங்கேற்பு
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மாநாட்டில், இலங்கையின் பிரபல ஆய்வு நிறுவனமான 'வெரிட்டே ரிசர்ச்' பங்கேற்றது.
தாய்லாந்தின் பேங்காக் நகரில் ஒக்டோபர் 12 முதல் 18 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில், உலகளாவிய கடன் நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் நல்லாட்சி தொடர்பான முக்கிய விவாதங்களில் இந்த நிறுவனம் பங்கேற்றது.
வெரிட்டே ரிசர்ச் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர், நிஷான் டி மெல், நிறைவேற்றுத் துணைத் தலைவர் இனோஷினி பெரேரா மற்றும் தலைமைப் பொருளாதார நிபுணர் ராஜ் பிரபு ராஜகுலேந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
சீர்திருத்தச் செயற்பாடு
இந்த நிலையில், இலங்கைக்காக வெரிட்டே ரிசர்ச் வடிவமைத்த உலகின் முதலாவது 'ஆளுமை சார்ந்த பிணைப்பொறுப்பு' கடன் முறையை, கடன் நெருக்கடியில் உள்ள ஏனைய நாடுகளும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து, குறித்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தச் செயற்பாடுகளின் போது நாடாளுமன்றம், நீதித்துறை மற்றும் சுயாதீன நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவதைத் தடுத்து, ஜனநாயக ஆளுமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளும் இதில் ஆராயப்பட்டன.
ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் நிதி வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மறைக்கப்பட்ட நிதி அபாயங்கள் குறித்து சர்வதேச நிபுணர்களுடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் உயர்மட்டக் கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன.