கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பான கூற்று: கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ள ஜீவன் தொண்டமான்
'அறிக்கை அரசியலை' தனது உயிர் மூச்சாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு இல்லைபோலும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் காட்டம் வெளியிட்டுள்ளார்.
அதனால் தான் சமூக வலைத்தளங்களிலும் காங்கிரசுக்கு எதிராக அக்கட்சியினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலுகுமாரின் கூற்று
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், நாடாளுமன்றத்தில் நேற்று (20.09.2023) தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஜீவன் தொண்டமான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து கொண்டும், ஊடகங்களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டும் 'பப்ளிசிட்டி' அரசியல் நடத்தும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு, மக்கள் அரசியல் என்றால் என்னவென்று தெரியவில்லை.
சிங்கள பகுதிக்குள் பிரவேசித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் : பொலிஸாருக்கு ஆளுநர் செந்தில் விடுத்துள்ள பணிப்புரை
அதனால்தான் மக்களுக்காக அரசியல் செய்யும் காங்கிரஸ் மீது சொற்கணைகளை தொடுத்து வருகின்றனர். ஜனநாயக மக்கள் முன்னணியினர் ஊடக அரசியல் நடத்துவது எமக்கு பிரச்சினை இல்லை. அது அவர்களுக்கு கைவந்த கலை.
அதுதான் அவர்களின் கட்சி கொள்கையும்கூட. ஆனால் தமது இருப்புக்காக காங்கிரஸ் மீது அபாண்டமாக பழி சுமத்துவதும், போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் ஏற்புடைய நடவடிக்கை அல்ல.
கஜேந்திரனுக்கு நேர்ந்த கதியே நாளை சுமந்திரன் - சாணக்கியனிற்கு இடம்பெறலாம்! பகிரங்க எச்சரிக்கை! (video)
பதிலளிக்க வேண்டிய தேவை
அது அநாகரீக அரசியலின் வெளிப்பாடாகும். அதனால்தான் எமக்கும் பதிலளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸை ஏதேனும் வழியில் விமர்சித்தால்தான் தமக்கு அரசியல் செய்யலாம் என்ற நோக்கில் செயற்படும் இவர்களுக்கு பதிலளிக்கும் நேரத்தில் மக்களுக்கு ஏதேனும் ஒரு சேவையை செய்துவிடலாம்.
ஆனால் கண்ணாடி கூண்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறியும் இத்தகைய அரசியல்வாதிகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களால் அறிக்கை விடுக்க முடியுமே தவிர மக்களுக்காக ஆக்கப்பூர்வமாக எதையும் செய்ய முடியாது என்பதே கசப்பான உண்மையாகும்.
கொள்கையே இல்லாமல் இரவில் ஒரு புறமும், பகலில் மறுபுறமும் அரசியல் நடத்தும் இவர்கள் முதுகெலும்பு பற்றியும், துணிவு பற்றியும் கதைப்பது கோமாளி அரசியலின் வெளிப்பாடாகும்.
அறிக்கைகளில் மாத்திரம் அரசியல் நடத்தும் இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.