சிறைச்சாலையில் குவியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: வெளியான காரணம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவின் நலனை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அஜித் பிரசன்னவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அண்மைய நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, கனக ஹேரத், ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, சம்பத் அத்துகோரள, மொஹான் சில்வா மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் அவரை சந்தித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,ரூ. 3 இலட்சம் அபராதத்தொகையும், அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் அஜித் பிரசன்ன மற்றும் 2 கடற்படை புலனாய்வு அதிகாரிகள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |