இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை! உரிய பெறுமதியை விட குறைந்த விலைக்கு விற்கப்படும் வாகனங்கள்
வாகன விற்பனையின் போது வாகன தரகர்கள் சட்டவிரோதமாக ஆதாயங்களை ஈட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகன விலைகளில் வீழ்ச்சி
இலங்கை சந்தையில் வாகனங்களின் விலையில் கடுமையான வீழ்ச்சி பதிவாகி வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் மிக வேகமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கூறியிருந்தது.
மேலும், ஆக்ஸியோ, பிரீமியோ, ரைஸ், சிஎச்ஆர், வெசல், வேகன் ஆர், பாஸோ, விட்ஸ், கிரேஸ் போன்ற பல வகை கார்களின் விலைகள் குறைந்து வருவதாக அந்த சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.
சட்டவிரோத ஆதாயம்
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை காரணமாக தற்போது குறைந்த விலைக்கு வாகனங்களை விற்கும் நிலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தற்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய பெறுமதியை விடவும் குறைந்த விலைக்கு வாகனங்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த சூழ்நிலையிலும் வாகன தரகர்கள் சட்டவிரோதமாக ஆதாயங்களை ஈட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ற போதும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகள் சுமார் 500 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் தாம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த போக்குவரத்து தொழிற்சங்க மையம் நேற்றைய தினம் நுகர்வோர் அதிகார சபையில் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.