நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதிக்கு யோசனை: நிதி அமைச்சு விளக்கம்
வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து, நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீக்குவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து வாகன இறக்குமதியாளர்கள் விரைவில் அறிக்கையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்த விரிவான தகவல்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி
கலந்துரையாடலின் போது, வாகன இறக்குமதியாளர்கள் நிதி இராஜாங்க அமைச்சரிடம், அனைத்து இறக்குமதிகளையும் ஒரே நேரத்தில் அனுமதிப்பதற்குப் பதிலாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் சாத்தியமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பொது போக்குவரத்து, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களுக்கான வாகன இறக்குமதியை வகைப்படுத்த அவர்கள் முன்மொழிந்துள்ளனர்
மேலும், வரி செலுத்துவதில் எழும் சிக்கல் நிலைகள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |