வெடுக்குநாறிமலை பௌத்தருக்குரியதென விரைவில் வெளியாகவுள்ள வர்த்தமானி..! அமைச்சர் அறிவிப்பு
வவுனியா, வெடுக்குநாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மதத்துக்குரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, அந்தப் பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.
வெடுக்குநாறி மலையில் நினைவுச்சின்னங்கள்
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வெடுக்குநாறி மலையில் காணப்படும் நினைவுச்சின்னங்கள் பௌத்த மதத்தைச் சார்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
இது கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குகை கல்வெட்டுகள் மூலம் அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில சட்டவிரோத கட்டுமானங்கள், அங்கிருக்கும் தொல்பொருள் நிலப்பரப்புக்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட நடவடிக்கை
தொல்பொருட்களுக்குச் சேதம் விளைவிப்பது மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களை எழுப்புவது தொடர்பாகத் தொல்பொருள் திணைக்களம் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின்படி, வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது, இடமாற்றுவது அல்லது மாற்றுவது ஆகியவை கடுமையான சட்டமீறல்களாகக் கருதப்படும்.

குறிப்பிட்ட அந்த இடத்தில் எவரேனும் மத வழிபாடுகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. ஆனால், அவ்வாறு வழிபாடுகளில் ஈடுபடும்போது அங்கிருக்கும் தொல்பொருட்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
வெடுக்குநாறிமலையின் வரலாற்றுப் பெறுமதியைப் பாதுகாக்கும் வகையில், அதனைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கான வர்த்தமானி வெளியீடு மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என்றார்.