பொது அமைப்புக்கள் ஆதன வரியினை செலுத்த வேண்டும் : வவுனியா தெற்கு பிரதேசசபை தவிசாளர் வேண்டுகோள்
பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புக்கள் நிலுவையில் உள்ள ஆதன வரியினை செலுத்த வேண்டும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று(16) வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரம் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு இவ்வாரம் முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கூமாங்குளத்திலே நடமாடும் சேவைகள் இடம்பெற்றிருந்தது. மேலும் சுற்றுசூழல் மற்றும் மரநடுகைகள் செயற்பாடுகள் ஒவ்வொரு வட்டாரத்தினை பிரதிநிதிப்படுத்தி ஒவ்வொரு பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் நேரிய குளம் வீதியில் 300 மரக்கன்றுகள் நடுவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. 17ம் திகதி சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தினமும், 18ம் திகதி வருமான ஊக்குவிப்பு தினம், 19ம் திகதி இலக்கிய மற்றும் ஊக்குவிப்பு தினம், 20ம் திகதி பொதுப்பண்பாட்டு தினமும் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்குகின்ற நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
அத்துடன், தெற்கு தமிழ் பிரதேச சபையினால் மகாறம்பைக்குளம் பகுதியிலே ஆதனவரி மதிப்பீடு தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் பிரதேச சபைக்குட்பட்ட ஆதனங்களில் இருந்து 12 சதவீதமாகவே தற்போதும் அறவிடப்பட்டு வருகின்றது.
எமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தாங்களாகே வருகை தந்து வரிப்பணத்தை செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் நடமாடும் சேவைகள் மூலமாகவும் வரிசெலுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக மக்களுக்கு நாம் தெளிவூட்டி வருகின்றோம்.
மக்களின் வரிப்பணத்தின் மூலம் வட்டாரங்களில் உள்ள குறைபாடுகளை சீர்செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். குறிப்பாக கிராமங்களில் உள்ள பொது அமைப்புக்கள் ஆதன வரியினை செலுத்தாத நிலைமை உள்ளது.
எனவே அவர்கள் தாங்களாக முன்வந்து நிலுவையில் உள்ள தொகையை செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.




