சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்த மாணவன் பொலிசாரிடம் ஒப்படைப்பு
யாழ். அச்சுவேலி சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்த 17 வயது மாணவன் வவுனியா பொலிசாரிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டார்.
யாழ். அச்சுவேலிப் பகுதியில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி வந்த குறித்த மாணவன் வவுனியாவில் உள்ள தனது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு வவுனியாவிற்கு வந்துள்ளார்.
ஆனால் வவுனியாவிற்கு வந்த பின் நண்பன் தொடர்பு கொள்ளவில்லை.
இந்நிலையில் வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய போது, வவுனியா ஊடகவியலாளர் இருவருக்கு இது தொடர்பில் அப் பகுதியில் இருந்தவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்த மாணவனுடன் மேற்கொண்ட உரையாடல்களின் போது குறித்த மாணவன் அச்சுவேலி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பி வந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து, அச்சுவேலி பொலிசார் ஊடாக குறித்த இரு மாணவர்கள் தப்பிச் சென்றதை உறுதிப்படுத்திய ஊடகவியலாளர்கள், வவுனியாவிற்கு தப்பி வந்த மாணவனை வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.