வவுனியா புதிய பேருந்து நிலைய மலசலகூடத்தால் மக்கள் அசெளகரியம்
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பாவனைக்காக இருக்கும் இரண்டு தொகுதி மலசலகூடங்களும் சீரான முறையில் இல்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பேருந்து நிலையத்தில் காணப்படும் ஒரு தொகுதி மலசலகூடம் பாவனையில் இல்லாமல் தேசிய போக்குவரத்து அதிகாரசபையினர் பூட்டி வைத்துள்ளதாக மக்கள் கூறியுள்ளனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையமானது ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களை கடந்த பின்னரும் இன்றுவரை பேருந்து நிலையத்தை நகரசபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
சுகாதார சீர்கேடு
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நிர்வாக கட்டமைப்பு தேசிய போக்குவரத்து அதிகாரசபையினரின் (NTC) கட்டுப்பாட்டிற்குள்ளேயே இன்றுவரை காணப்படுவதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளும் இதுவரை எந்த ஒரு குரலையும் கொடுக்கவில்லை என்று மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த மலசலகூடங்கள் சுகாதார சீர்கேடாக காணப்படுவதாலும் நாளுக்கு பல நூற்றுக்கணக்கானோர் ஒரே மலசலகூடத்தை உபயோகிப்பதனாலும் தொற்றுநோய்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மலசலகூடங்களை குத்தகைக்கு வழங்காமல் அதற்கு ஒரு கட்டணத்தையும் தேசிய போக்குவரத்து அதிகாரசபையினர் அறவிட்டாலும் மலசலகூடம் பாவனைக்கு உதவாத நிலையிலேயே காணப்படுவதாக பயணிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை பேருந்து நிலையத்திற்கு முன்பாக பொதுமக்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்திவிட்டு பேருந்தில் பயணிப்பதால் அப்பகுதியில் பல திருட்டு சம்பவங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.