வவுனியாவை உலுக்கிய படுகொலை சம்பவத்தின் பின்னணி - பொலிஸார் வெளியிட்ட தகவல்
வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
இந்த கும்பலுக்கு அவசியமான பிரபல குண்டர் ஒருவரையே தேடி வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் இந்த கும்பல் அந்த பிறந்த நாள் வீட்டிற்கு வந்த போது, அவர்கள் தேடி வந்த நபர் விருந்தில் கலந்து கொண்டு அங்கிருந்து திரும்பியதால் ஆத்திரமடைந்த கும்பல் இந்த செயலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
முகமூடி அணிந்த கும்பல்
முகமூடி அணிந்து வந்த கும்பல் வீட்டிற்குள் நுழைவதனை அவதானித்த 21 வயதான பெண் கத்தி கூச்சலிட ஆரம்பித்தமையினால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்படும் என நினைத்து அவரை கத்தியால் குத்தி பின்னர் தீ வைத்துள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்குள் நுழைந்த கும்பல் ஒருவரின் பெயர் சொல்லி அந்த நபர் குறித்த வீட்டில் இருக்கிறாரா என்று கேட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அப்போது வீட்டில் இருந்த அனைவரும் தீக்காயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் இருந்ததால், சம்பவம் எப்படி நடந்தது என்பது பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. எனவே தாக்குதலுக்கு வந்த கும்பலை அடையாளம் கண்டு கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் கண்டுபிடிப்பு
கும்பலால் பெயர் கூறி தேடப்பட்ட நபர் வவுனியாவில் உள்ள பிரபல குண்டர் எனவும் பலரிடம் கப்பம் கேட்டு பணம் கொடுக்காததால் வெட்டி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியில் வசிக்கும் வர்த்தகரான சுரேஷ் என்பவரின் வீட்டின் மீதே இந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இங்கு அந்த வீட்டில் விருந்துக்கு வந்திருந்த சுரேஷின் உறவினரான 21 வயது பாத்திமா சசீமா சைதி உயிரிழந்துடன் மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த பத்து பேரில் நான்கு பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் கூறப்படுகின்றது.