தமிழர் பகுதியில் எழும் மற்றுமொரு விகாரை: மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
வவுனியா - சமளங்குளம், கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகம் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தால் குழப்பப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பகுதியில் எழும் விகாரைகள்
இதன்போது தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், "வவுனியா - சமளங்கும், கல்லுமலை பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றிருந்தோம்.
அங்கு தொல்லியல் எச்சங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையிலே பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்களை தொல்லியல் திணைக்களம் குழப்பி வைத்துள்ளது.

எனவே, நாங்கள் இது தொடர்பாக சில விடயங்களை தெளிவுபடுத்தி இருந்தோம். குருந்தூர்மலையிலும் ஆரம்பத்தில் இப்படியான ஒரு கட்டுமானமே முன்னெடுக்கப்பட்டது. தற்போது அங்கு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.
கல்லுமலையில் ஒரு பிள்ளையார் ஆலயம் உள்ளது. அதனை திருத்துவதற்கு உதவி செய்கின்றோம். ஆலயத்தை தொடர்ந்து நீங்கள் கட்டலாம் என்ற சலுகைகளை கூறி விகாரையை கட்டும் முயற்சியே எதிர்காலத்தில் இடம்பெறும். இது தொடர்பாக மக்களுக்கு சொல்லியிருந்தோம்.
இருப்பினும், ஆலய நிர்வாகம் உட்பட்ட மக்களையும் குழப்பியுள்ளது. மிகுந்த கவலையை தருகின்றது. இந்த ஆபத்தினை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
குறிப்பாக, சமளங்குளம் மக்களும் ஆலய நிர்வாகமும் இதனை விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். இன்று அவர்கள் சொல்லும் வாக்குறுதி உங்களை சமாளிப்பதற்கு மட்டுமே.
தமிழர் பகுதியில் விகாரையாக எழுந்து நிற்கின்ற இடங்களில் எல்லாம் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஒரு சிலர் ஜேவிபியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும், அடிப்படை நலன்களுக்காகவும் மக்களை குழப்பியுள்ளனர்.

இதன் மூலம், எதிர்காலத்தில் உங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு ஜீவனோபாயம் அழிக்கப்படும். அங்கு சென்ற அரச இயந்திரம் மக்களை திருப்திப்படுத்துவதற்கான சில செய்திகளை கூறியிருப்பதாக சிந்திக்கின்றோம்.
இந்த ஆபத்தை உணராத வரைக்கும் சமளங்குளம் மண்ணை காப்பாற்ற முடியாது. எனவே, தொடர்ச்சியாக எதிர்வினையாற்றுகின்ற செயற்பாடுகளை தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.