முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட தரப்புக்கு உறுதியாகிய மரண தண்டனை
2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று இந்த தீர்மானம் பிரதிவாதிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளையும் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி
இதன்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால், பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன், மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, மரண தண்டனை எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிடவில்லை எனக் குறிப்பிட்டார்.
பிரதிவாதிகள் ஜனாதிபதியின் மன்னிப்பை எதிர்பார்த்திருந்தால் இந்த விவரம் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே, தண்டனையை நடைமுறைப்படத்தும் திகதி தொடர்பான விவகாரம் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தன்னால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |