முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா
முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் கரையோரமாக வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள்பாலித்து வரும் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று ஆகும்.
இன்று அதிகாலை 3 மணியளவில் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து மடபண்டம் எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் ஆரம்பமானது.
மடப்பண்டம் எடுத்துவரப் பட்டதைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு மடை பரவி விளக்கேற்றி பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து அடியவர்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களை முன்னெடுத்தனர்.
அதிகளவான பக்தர்கள் வருகை
கடந்த மூன்று கடந்த 3 ஆண்டுகளாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அடியவர்கள் நேத்திக்கடன் செய்வதற்கு பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில் இம்முறை அதிகளவான பக்தர்கள் வருகை தந்து காவடி பால்செம்பு உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியுள்ளனர்.
ஆலய பொங்கல் இன்று இரவு 10 மணி முதல் மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இதேவேளை, வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டு விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று இரவு 10 மணிக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு நாளை அதிகாலை நிறைவடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்
மட்டக்களப்பில் புகழ்பெற்ற தாண்டவன்வெளி குளக்கட்டு கண்ணகியம்மன் ஆலய அலங்கார திருச்சடங்கு உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி திருக்குளிர்த்தி பாடி அம்மன் உட்சவம் நிறைவுபெறவுள்ளது.
தாண்டவன்வெளி, ஏரன்ஸ் வீதி, வாழ் மக்களால் பத்தாம் நாள் சடங்கு உற்சவத்தினை சிறப்பிக்கும் முகமாக குருந்தையடி பிள்ளையார் ஆலயத்திலிருந்து தீ குழிக்கான தீக்கட்டை மற்றும் மடப்பெட்டிகள் உள்ளிட்ட பூசைப் பொருட்கள் எடுத்துவரும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு மேள தாள வாத்தியங்கள் முளங்க காவடிகள் ஆடிவர கண்ணகியம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.
கண்ணகியம்மன் ஆலய பிரதம குரு சிதம்பரசாந்தரூபக் குருக்கள் அவர்களால் பூசைகள் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தீக்குழிக்கான தீ மூட்டும் வைபவம் இடம்பெற்றது.
10ம் நாள் திருச்சடங்கினை சிறப்பிககும் முகமாக இன்று அதிகாலை ஆலய பிரதம பூசகர் சித்திரவேல் ஐயா தலைமையில் தீமிதிப்புக்கான கிரியைகள் இடம் பெற்று, தீமிதிப்பு வைபவம் மிக சிறப்புடன் இடம் பெற்றது. செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணியளவில் அம்பாளின் திருக்குளிர்த்தி பாடி உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது.




