வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு மிகுதிப்பணத்தை வழங்குங்கள்! -வலி.மேற்கு பிரதேச சபை ஜனாதிபதியிடம் கோரிக்கை
வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரிவில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட செமட்ட செவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மிகுதிப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னைய அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை அடுத்த அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் புறந்தள்ளிச் செயற்படுவதால் வலி.மேற்கில் 1039 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
வலி.மேற்கு பிரதேச சபையின் 38 ஆவது அமர்வு இன்று (22) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இதன்போது உறுப்பினர் ந.பொன்ராசா, மேற்படி வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பாதிப்பு தொடர்பாக விசேட பிரேரணை ஒன்றைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாச 2015, 2016 ஆம் ஆண்டுகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக வீட்டுத்திட்டங்களை வழங்கியிருந்தார்.
பரம்பரை பரம்பரையாக ஓலைக் குடிசைகளில் வசித்த எமது வீடுகள் கிடைத்த மகிழ்ச்சியில் தமது ஓலை வீடுகளையும் பிடுங்கி எறிந்துவிட்டு அந்த இடங்களில் அத்திவாரம் வெட்டி வீடுகளை அமைக்கத் தொடங்கினர்.
ஆனால் வீடுகளை அமைப்பதற்கு ஆறு இலட்சம் ரூபா வழங்கப்பட வேண்டிய அந்த மக்களுக்கு இதுவரை 60 ஆயிரம் ரூபா தொடக்கம் 175,000 வரையான பணம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமக்குத் தெரிந்தவர்களிடம் கடன் பெற்றும், தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்தும் வீடுகளைக் கட்டத் தொடங்கிய மக்கள் இன்று நிர்க்கதியற்று இருக்கின்றனர்.
கடன்காரர்களின் தொல்லைகள் தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்போது நல்லாட்சி அரசுக்கு முண்டு கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ, வீடுகளை வழங்கிய தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவோ பாதிக்கப்பட்ட மக்களின் மிகுதிப் பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தாமல் இருப்பது கவலையளிக்கின்றது.
எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகத் தலையிட்டு மக்களுக்கு மிகுதிப் பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, உறுப்பினர்களான வி.உமாபதி, கு.குணசிறி, சி.பாலகிருஷ்ணன், த.துரைலிங்கம், செ.பரமசிவம்பிள்ளை, சி.சிறிஜீவா ஆகியோரும் உரையாற்றியுள்ளனர்.
வட்டுக்கோட்டையில் மூன்று பெண் பிள்ளைகளை உடைய குடும்பமொன்றுக்கு குறித்த வீடு வழங்கப்பட்டதாகவும், அவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகிய நிலையில் அயல் வீடுகளில் சென்றே இரவு உறங்குகின்றனர் எனவும் உறுப்பினர் சிறிஜீவா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குடும்பமொன்று தம்மிடம் ஒரு இலட்சம் ரூபா கடன் பெற்றது எனவும், இதுவரை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கின்றது எனவும் உறுப்பினர் உமாபதி தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடியமைக்கு அமைவாக நிதியை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என உறுப்பினர் சி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
குறித்த பிரேரணை அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதுடன்,இந்தக் கோரிக்கையை அடுத்த சில தினங்களில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.




காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
