மட்டக்களப்பில் பொதுமக்கள் மீது தாக்குதல்: முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
நேற்று முன்தினம் (25.02.2025) வாகரை கட்டுமுறிவு, கட்டு முறிவை அண்டிய பிரதேசங்களில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அவர்களுடைய உடைமைகள் அழிக்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான ஆய்வும், குறித்த மக்களுக்கான காணிகளை நிரந்தரமாக்குவதும் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் ஐய்யாவினால் குறிப்பிட்ட பிரதேச செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
உடன் நடவடிக்கை
இதையடுத்து, இன்று (27.02.2025) வாகரை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குறிப்பிட்ட வன இலாகா திணைக்கள அதிகாரிகள், வாகரை பிரதேச பொலிஸார், சமூக சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நடைபெற்ற கலந்துரையாடலில் அப்பிரதேசத்தில் தொடர்ந்து பயிர்ச்செய்கை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தற்காலிக அனுமதி வழங்குவதாகவும், வழங்கப்பட்ட எல்லைகளைத் தவிர எல்லைகளுக்கு அப்பால் பயிர்செய்கை நடவடிக்கையை விஸ்தரிக்க வேண்டாம் என்றும், தற்காலிக அனுமதியை நிரந்தர அனுமதியாக பெற்று தருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு வாக்குறுதிகளை அளித்தனர்.
மேலும், தாக்குதல் நடாத்தியதாக கருதப்படும் அதிகாரிகள் மீது தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்ட வன இலாகா அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவ்வாறே, நேற்றைய தினம் வாகரை பிரதேச பொலிஸ் அதிகாரியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத், இது சம்பந்தமாக கலந்துரையாடி பாதிக்கப்பட்ட மக்களுடைய முறைப்பாட்டினை பதிவு செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



