தடுப்பூசி அட்டை கோரிய விவகாரம்! - எழுத்து மூலம் விளக்கம் கோரியது மனித உரிமை ஆணைக்குழு
வவுனியா பிரதேச செயலகத்திற்குச் செல்பவர்களிடம் கோவிட் தடுப்பூசி அட்டை கோரிய விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு எழுத்து மூலம் விளக்கம் கோரியுள்ளதாக அதன் வடமாகாண இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று ஊடகவியலாளர் வினவிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா பிரதேச செயலகத்திற்குச் சேவை பெறுவதற்காகச் சென்ற பொதுமக்களிடம் நுழைவாயிலில் வைத்து தடுப்பூசி அட்டை பரிசோதிக்கப்பட்டதாகவும், தடுப்பூசி அட்டை உள்ளவர்களுக்கே பிரதேச செயலகத்திற்குள் சென்று சேவைகளைப் பெற அனுமதிக்கப்பட்டதுடன், ஏனையவர்களுக்கான சேவைகள் வாயில் வைத்தே வழங்கப்படுவதாக பொது மக்கள் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் வெளிக் கொண்டு வந்திருந்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் எமது கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டையடுத்து இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளரிடம் எழுத்து மூலம் விளக்ககோரி கடிதம் அனுப்பியுள்ளேன்.
அதில் குறித்த தடுப்பூசி அட்டை பரிசோதித்து அனுமதிக்கும் நடைமுறையானது எந்த சுற்று நிருபத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது எனவும், ஏனைய இடங்களில் அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை.
அதற்கான சுற்று நிருபங்கள் எவையும் இருக்கின்றனவா என்ற அடிப்படையில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. தொலைபேசி மூலமும் பேசியிருந்தேன். ஆனால், பின்னர் குறித்த அறிவிப்பு நீக்கப்பட்டு வழமை போன்று மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
வவுனியாவின் ஒரு பகுதியில் மட்டும் இவ்வாறான கட்டுப்பாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொதுவான நிலைப்பாடாக வருகின்ற போது அதனைப் பரிசீலிக்கலாம்.
அத்துடன், மக்களுக்குச் சரியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அவர்களைத் தடுப்பூசி பெறச் செய்வதே சிறந்த செயற்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
