விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் முல்லைத்தீவில் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், வட மாகாணத்திலும் அண்மையில் பைசர் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
சுகாதாரத் துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இராணுவத்தினர் குறித்த விசேட தேவையுடையவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.
இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் இயங்கிவருகின்ற இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கின்ற விசேட தேவையுடைய சிறுவர்களும் குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
