கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை: நிபுணர்களின் வெற்றிடங்கள் நிரப்ப கோரிக்கை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் போதிய மயக்க மருந்து நிபுணர், சத்திரசிகிச்சை நிபுணர் மற்றும் கதிரியக்க நிபுணர்களின் வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்திய நிபுணர்கள் காரணமாக சனி ஞாயிறு ஆகிய நாட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அவசர நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்படும் அவல நிலை காணப்படுகின்றது.
நிபுணர்களின் வெற்றிடம்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான போதிய ஆளணி வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாத நிலை காணப்படுகின்றது.
குறித்த மாவட்ட பொது வைத்தியசாலையானது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அப்பால் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் சிகிச்சை வழங்கும் ஒரு பிரதான வைத்தியசாலையாக காணப்படுகிறது.
குறிப்பாக வடக்கையும் தெற்கையும் இணைக்கின்ற ஏ-09 நெடுஞ்சாலையின் வவுனியா வைத்தியசாலையிலிருந்து சுமார் 78 கிலோ மீட்டர் தொலைவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து 63 மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு பிரதான வைத்தியசாலையாகவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு மயக்க மருந்து நிபுணர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணரும் இரண்டு சத்திர சிகிச்சை நிபுணர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரு சத்திர சிகிச்சை நிபுணரும் உள்ளதுடன் கதிரியக்க நிபுணர்கள் எவரும் இல்லாத நிலை காணப்படுகிறது.
கோரிக்கை
இதனை விட Xray techniclan இரண்டு பேர் இருக்க வேண்டிய நிலையில் ஒருவர் மாத்திரமே உள்ளார் இதனால் சனி ஞாயிறு தினங்களில் மேற்படி சேவைகள் இடம்பெறுவதில்லை இதனால் குறித்த தினங்களில் அனுமதிக்கப்படும் அவசர நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் நிலை காணப்படுகிறது.
ஏ -09 நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் விபத்துக்களால் காயமடைவோர் அதிகளவில் அனுமதிக்கப்படுவதனால் மேற்படி வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு நெருக்கடிகள் எதிர்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு இந்த வைத்திய சாலையில் வெற்றிடமாக காணப்படுகின்ற வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



