கொரோனா மரணங்களை பயன்படுத்தி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் வாக்கு சேகரிக்கின்றன! மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
கொரோனா மரணங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை இனம் அல்லது மத பிரச்சினையாக மாற்றிக்கொள்ளாது, சுகாதார பிரச்சினையாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை மிகவும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும் என்பதுடன், அதனை அரசியல் பிரச்சினையாக மாற்றிக்கொள்ளக்கூடாது எனவும் கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது தேரர் கூறியுள்ளார்.
இந்த மரணங்களை தகனம் செய்வதா அல்லது அடக்கம் செய்வதா என்ற பிரச்சினையில், அரசாங்கமும், எதிர்க்கட்சியும் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் செயற்படுவது மிகவும் மோசமான நிலைமை.
சிறுபான்மை மக்களை மகிழ்விக்க ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருக்கின்றது. எதிர்க்கட்சி சிறுபான்மை மக்களின் வாக்குகளை தமது பக்கம் கவர, அவர்களின் பக்கம் இருக்க வேண்டும் என நினைக்கின்றது.
இந்த இடத்தில் நாம் சிக்கலாக்கி கொண்ட விடயம் உள்ளது. சிறுபான்மை மக்களின் வாக்குகளை எதிர்பார்த்து தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் மோசமான நிலைமை.
உண்மையில் இது அப்படி செய்ய வேண்டிய விடயமல்ல. இந்த சந்தர்ப்பத்தில் மனித இனத்தின் நலனுக்கான என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
இதனால், அரசாங்கமும், எதிர்க்கட்சியும் அடிப்படைவாத அணிகளின் பல்வேறு சக்திகள் ஊடாக செயற்படும் குழுக்களுக்காக இந்த சுகாதார பிரச்சினையை தேசிய பிரச்சினையாக அல்லது மத பிரச்சினையாக மாறும் நிலைமை உருவாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கின்றோம்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் கூட மக்களை தம்மிடம் தக்க வைப்பதற்காக அடிப்படைவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் பேசி வருகின்றனர்.
அத்துடன் சுகாதார பிரச்சினையை சுகாதார பிரச்சினையாக தீர்த்துக்கொள்ள முடியாது என்றால், நாட்டு மக்களின் ஞானம் குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும்.
பிரச்சினையை தீர்க்க சுகாதார துறையினருக்கு இடமளிக்கப்பட வேண்டும். விஞ்ஞான ரீதியான ஆய்வுகளிலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வு இருக்கின்றது. இது தொழிற்நுட்ப ரீதியாக தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்றை அன்றி மத சார்ந்த விடயமல்ல.
விகாரைகளில் உள்ள பிக்குகள், கோயில்களில், தேவாலயங்களில் இருக்கும் மத குருமார் இது குறித்து பேச வேண்டிய அவசியமில்லை. அரசியல்வாதிகள் இதில் தலையிடும் அவசியமில்லை.
சுகாதார பிரச்சினை தீர்க்க சுகாதார அதிகாரிகளுக்கு இடமளியுங்கள் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.