அமெரிக்க சபாநாயகரின் சுற்றுப் பயணம்! சீனா விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார் என்று அவரது அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் தாய்வான் பயண சாத்தியக்கூறு பற்றிய தகவல் எதனையும் அந்த அலுவலகம் வெளியிடவில்லை. அவர் தாய்வானின் சுயராஜ்ய தீவுக்கு செல்லக்கூடும் என்று தீவிர ஊகங்கள் உள்ளன.
சீனாவால் தாய்வான் உரிமை கோரப்படும் நிலையில், அங்கு சென்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று சீனா ஏற்கனவே எச்சரித்துள்ளது.
சீனாவின் எச்சரிக்கை
கடந்த 25 ஆண்டுகளில் எந்த ஒரு உயர் பதவியில் உள்ள அமெரிக்க அதிகாரியும் தாய்வானுக்கு விஜயம் செய்யவில்லை. தாய்வானை பிரிந்து சென்ற மாகாணமாக சீனா பார்க்கிறது, அது நாட்டின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.
அத்துடன் பீய்ஜிங் எதிர்காலத்தில் இதை அடைய சக்தியைப் பயன்படுத்துவதையும் சீனா நிராகரிக்கவில்லை. சீன அதிகாரிகள் தைபே மற்றும் வோஷிங்டனுக்கு இடையே வளர்ந்து வரும் இராஜதந்திர உறவு குறித்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ஆறு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிற்கு திடீர் விஜயம் செய்தனர்.
அமெரிக்க அதிகாரிகளின் விஜயம்
இதேவேளை அமெரிக்கா சீனாவுடன் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டுள்ளது, தைவானுடன் அல்ல என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தாய்வானுக்கு செல்லப்போவதாக கூறியிருந்த நிலையில், அவர் அங்கு செல்வது நல்ல யோசனை அல்ல என இராணுவம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.