முடக்கப்பட்ட ஈரான் சொத்துகள் குறித்து அமெரிக்காவின் அதிரடித் திட்டம்!
குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை வளைகுடா நாடுகளின் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த அமெரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரானால் வளைகுடா நட்பு நாடுகளுக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பை கணக்கிடுமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படும் சேதங்களைச் சரிசெய்யவும் இந்த ஈரானிய சொத்துகளைப் பயன்படுத்த வாஷிங்டன் பரிசீலிக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

மூன்று மாதங்களாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம், அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டொலர் சொத்துகளை விடுவிப்பதிலேயே தங்கியுள்ளது என்று ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்திருந்தார் இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த அதிரடித் திட்டம் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையன்று ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ட்ரோன்களை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு சுட்டு வீழ்த்தியதுடன், ஈரானின் கடலோர ரேடார் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவல் படை தெரிவித்துள்ளது. குடியிருப்புப் பகுதிகள் மீது வந்த 7 ஏவுகணைகளைத் தடுத்ததாக குவைத் இராணுவம் கூறியுள்ளது.
இத்தாக்குதலால் சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. பஹ்ரைனில் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்தத்திற்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள சூழலில், மத்தியஸ்த நாடான பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மோசின் நக்வி சனிக்கிழமையன்று அவசரமாகத் தெஹ்ரான் சென்றுள்ளார்.
அவர் பாகிஸ்தான் பிரதமரின் "சிறப்பு கடிதம்" ஒன்றை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி டிரம்ப் மீது உள்நாட்டு அரசியல் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
ஈரானின் பெரும்பாலான ஏவுகணை உற்பத்தித் தளங்கள் அழிக்கப்பட்டுவிட்ட போதிலும், அவர்களிடம் இன்னும் 21% முதல் 22% வரையிலான ஏவுகணைகள் எஞ்சியிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.