நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம்! வடக்கு மாகாண ஆளுநர்
வடக்கு மாகாணத்தின் நிலைத்த நீடித்த அபிவிருத்திக்காக முதலீட்டாளர்களை வரவேற்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களுக்குப் பொறுப்பான செயலர் அந்தோனி பெர்னார்ட்டிடம் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம் (23) அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழுவுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தின் நிலைமைகள்
வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக வந்துள்ளதாகவும், பல தரப்பினரையும் சந்தித்துள்ளதாகவும் அமெரிக்கத் தூதரகத்தின் செயலர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணிகளின் விடுவிப்புக்கள் அது தொடர்பான முன்னேற்றம் மற்றும் எதிர்கால காணி விடுவிப்புக்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பில் ஆளுநரிடம், தூதரக அதிகாரி கேட்டறிந்து கொண்டார்.
மக்களின் காணிகள் மக்களுக்கே என்ற அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையில் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன என ஆளுநர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் முன்னைய ஆட்சியாளர்களால் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வயல் நிலங்கள் என்பன வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் வர்த்தமானி மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையை எடுத்துக்கூறிய ஆளுநர் இது திட்டமிட்ட நடவடிக்கை எனவும் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம்
தற்போதைய அரசாங்கம் அவற்றை விடுவிப்பதற்காக எடுத்துள்ள முயற்சிகளையும் விவரித்தார்.
கடந்த கால அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பாகுபாடான நடவடிக்கைகளால் ஏற்பட்ட பிரச்சினைகளின் தாக்கம் தற்போதும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர் மிகச் சவாலான நிலையிலும் அதனைத் தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டிருந்தார்.








