ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல்: அமெரிக்கா எச்சரிக்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுவதால், அங்குள்ள அமெரிக்கக் குடிமக்களை மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்றைய தினம் ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் இலக்கு வைக்கப்பட்டதாக அமீரக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
"வான்வழி அச்சுறுத்தல்கள் குறித்து அமீரக அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை அமெரிக்கக் குடிமக்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகத் தயாராக இருக்க வேண்டும்," என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

அமீரகத்திற்கான பயண ஆலோசனையை அமெரிக்கா 'நிலை 3' இல் வைத்துள்ளது. அதாவது, குடிமக்கள் அங்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
தூதரகம் மற்றும் தூதரக அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கினாலும், அவசரத் தேவை இல்லாத அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவங்கள் நிகழும்போது ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிக் கதவுகளுக்கு அருகில் இருப்பதைத் தவிர்க்குமாறும், போதுமான உணவு மற்றும் மருந்துகளை இருப்பு வைத்திருக்குமாறும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமீரக வான் பாதுகாப்புப் படையினர் ஈரானால் ஏவப்பட்ட 15 ஏவுகணைகளையும் 4 ட்ரோன்களையும் இடைமறித்து அழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், புஜைரா (Fujairah) எண்ணெய் ஆலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.