அமெரிக்காவில் புழுதி புயலில் சிக்கி 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! 6 பேர் பலி
அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் வீசும் காற்று காரணமாக வீசிய புழுதிப் புயலினால் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் பயணித்த 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
புழுதி புயல்
இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் பயணித்து கொண்டிருந்த போது அங்கு பயங்கரமான புழுதி புயல் வீசியதில் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெஞ்சாலையில் பரவியுள்ளது.
இதனால் வாகனங்கள் ஒன்றோடொன்று அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு லொறி, கார், பேருந்து என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு லொறிகளில் தீப்பிடித்துள்ளது.
மீட்பு பணிகள்
இதன்போது விபத்து நடந்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று வாகனங்களில் பிடித்த தீயை மற்ற வாகனங்களுக்கு பரவாமல் அணைத்துள்ளனர்.
சிகாகோ மற்றும் செயின்ட் லூயிஸ் போன்ற நகரங்களை இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.