தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் காய்நகர்த்தல்! - பெரும் இராஜதந்திர சீற்றத்தில் கொழும்பு
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவுடன் இணைந்து காய்நகர்த்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு அங்கமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான குழுவினரை வாஷிங்டன் டிஸிக்கு அமெரிக்கா அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்து தகவலறிந்த கொழும்பு அரசு பெரும் இராஜதந்திர சீற்றத்தில் இருப்பதாக யாழில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதைய நிலையில், சுமந்திரன் உள்ளிட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவொன்று வெகு விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது. இதன் போது அமெரிக்க இராஜாங்க அமைச்சுடன் இந்த குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
இந்த குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன் மற்றும் சட்ட நிபுணர் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோரை சம்பந்தன் நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்கள் யோசனைகளை பரிந்துரை செய்வதற்காக 2006ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அனைத்து தரப்பு நிபுணர் குழுவில் சுமந்திரன் தவிர்ந்த மற்றைய இருவரும் இடம்பெற்றிருந்தனர்.
வாஷிங்டன் - புது டெல்லி அரசுகளின் மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு அமையவே இந்த காய்நகர்த்தல் இடம்பெறுவதாக அறிந்த கொழும்பு அரசு பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை அறிந்த பின்னரே புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடல் என்ற அறிவிப்புகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கெரவலபிட்டிய மின்நிலைய பங்குகளை பங்காளி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நிறுவனத்திற்கு அவசர அவசரமாக கைமாற்றும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு அமெரிக்காவை தாஜா பண்ணும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டமையின் பின்னணி இதுதான் என தகவல் வெளிவந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சந்திப்பு முதலில் செப்டம்பர் மாதத்தில் நடைபெற இருந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் சில காரணங்களால் இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி, அடுத்த வாரம் சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அமெரிக்கா செல்லவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri