அமெரிக்க நீதித்துறை மீது குற்றம் சாட்டிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிடுவதில் அமெரிக்க நீதித்துறை முறையற்ற வகையில் பல முக்கிய தகவல்களை மறைத்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எப்ஸ்டீனுடன் தொடர்புடைய செல்வாக்கு மிக்க சுமார் 20 நபர்களின் பெயர்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 6 நபர்கள் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் பிரதிநிதிகள் ரோ கண்ணா மற்றும் தோமஸ் மாசி தெரிவித்துள்ளனர்.
மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் இருந்த எப்.பி.ஐ (FBI) இந்த ஆவணங்களை முன்னரே தணிக்கை செய்துவிட்டதாகவும், அதிகாரமிக்க அந்த நபர்களை அம்பலப்படுத்த ஆவணங்கள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு
மற்றொரு புறம், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் முறையாக மறைக்கப்படாமல் வெளியிடப்பட்டதற்கு அவர்களது சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது ஒரு 'தொழில்நுட்பத் தவறு' என்று நீதித்துறை விளக்கமளித்துள்ள போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த ஆவணங்களை ஆய்வு செய்யப் போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என்றும், இது ஒரு திட்டமிட்ட 'மறைப்பு நடவடிக்கை' என்றும் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
இந்த ஆவணங்களில் எப்ஸ்டீன் மற்றும் ஒரு மர்ம நபருக்கும் இடையே நடந்த சித்திரவதை வீடியோக்கள் குறித்த மின்னஞ்சல் உரையாடல்கள் போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.