ஈரானின் முக்கிய இராணுவ தளங்களை இலக்கு வைத்த அமெரிக்கா.. Just a love tap - ட்ரம்பின் நையாண்டி பதில்
ஈரானின் முக்கிய இராணுவ தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில், அமெரிக்கப் போர்க்கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு, அமெரிக்க கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்களான USS Truxtun, USS Rafael Peralta மற்றும் USS Mason ஆகியவை சர்வதேச கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணை ஓமான் வளைகுடாவை நோக்கிப் பயணித்தன.
அன்பான தட்டல் (Love tap)
இதன்போது, ஈரானியப் படைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (Drones) மற்றும் சிறிய படகுகள் மூலம் அமெரிக்கக் கப்பல்களை வழிமறித்துத் தாக்குதல் நடத்த முயன்றுள்ளன.

ஈரானின் இந்த நடவடிக்கையை முறியடித்த அமெரிக்கப் படைகள், தற்காப்புக்காகப் பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன.
இதில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஏவுதளங்கள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், உளவு மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் போன்ற முக்கிய இராணுவக் கட்டமைப்புகள் அமெரிக்காவால் குறிவைத்துத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
இந்த மோதலில் அமெரிக்காவின் போர்க்கப்பல்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என CENTCOM தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தாக்குதல்கள் தொடர்பில் தெரிவிக்கையில், ”தற்போது நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை. இது ஒரு பெரிய அளவிலான தாக்குதல் அல்ல, வெறும் "அன்பான தட்டல்" (Love tap) மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.