இலங்கை பாதுகாப்புப் படையின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை! யஸ்மின் சூக்காவின் எச்சரிக்கை
இலங்கைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு எதிராகத் தடைவிதிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பானது வெறுமனே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் வீசாக்களை முடக்குவதற்கானது மாத்திரமல்ல.
மாறாக அவர்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்த - தற்போதும் உயர் அதிகாரங்களைக் கொண்ட பதவிகளிலிருக்கும் பலருக்கான எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இத்தீர்மானம் தொடர்பில் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற வலிந்து காணமலாக்கப்படல் சம்பவங்களுடன் தொடர்புடைய இலங்கைக் கடற்படைப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் கடந்த 2000 ஆம் ஆண்டில் 8 தமிழர்களை சட்டவிரோதமாகப் படுகொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தடைவிதித்துள்ளமையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் வரவேற்றுள்ளனர்.
பதினொருபேர் கடத்தல் வழக்கில் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருமான லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி இலங்கைக் கடற்படைப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரியாவார்.
நீதிமன்ற ஆவணங்களின் பிரகாரம் சந்தன ஹெட்டியாராச்சி இரண்டு விசேட புலனாய்வுக்குழுக்களை வழிநடத்தியதாகவும் அவற்றின் ஊடாகவே மேற்படி கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்படல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேற்படி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த வியாழக்கிழமை வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அதேபோன்று கடந்த 2000 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளடங்கலாக 8 தமிழர்களைச் சட்டவிரோதமாகப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்ப வழங்கி விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் 2008 - 2009 ஆம் ஆண்டில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 பேரில் ஒருவரின் உறவினர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்,
“நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படும்போது நாங்கள் நம்பிக்கையை இழந்தோம். நீதியை வழங்குமாறு கோருவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது? என்று நான் என்னுடைய குடும்பத்தினரிடம் கேள்வியெழுப்பினேன்.
ஆனால் தற்போது மீண்டும் எனது மனதில் நம்பிக்கையின் வித்து துளிர்விட ஆரம்பித்திருப்பதுடன் இந்தச் செய்தியின் மூலம் நீங்கள் அதற்கு நீரூற்றுகின்றீர்கள். குறைந்தபட்சம் அமெரிக்காவேனும் இதனைச் செய்தமையினையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
இது எமக்கு சற்று தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கின்றது' என்று குறிப்பிட்டுள்ளார். அதேவேளை 'அமெரிக்காவின் அறிவிப்பானது வெறுமனே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் வீசாக்களை முடக்குவதற்கானது மாத்திரமல்ல.
மாறாக அவர்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்த - தற்போதும் உயர் அதிகாரங்களைக்கொண்ட பதவிகளிலிருக்கும் பலருக்கான எச்சரிக்கை சமிக்ஞையாகும்.
ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைத்து, குற்றச்சாட்டுக்களைக் கைவிடுவதற்கான பரிந்துரைகளை வழங்குவதன் மூலமும் குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளிப்பதன் மூலமும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளுக்குப் பதிலளிக்கவேண்டிய நிலையிலிருக்கும் கட்டளை அதிகாரிகளைக் காப்பாற்றிவிடமுடியாது' என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி....
இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவர் அமெரிக்காவிற்குள் நுழைய அதிரடியாக தடை விதிப்பு

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 20 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
