இணையத்தில் கசிந்த அமெரிக்க இராணுவத்தின் அதி இரகசிய ஆவணங்கள்! 21 வயது இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் தொடக்கத்திலிருந்து இணையத்தில் அமெரிக்க இராணுவத்தின் அதி இரகசிய ஆவணங்கள் கசிந்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி வந்தன.
இந்நிலையில், இரகசிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஆவணங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க விமானப்படை அதிகாரி ஜாக் டீக்ஸீராவிற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
பாஸ்டனில் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகிய போதே அவர் மீது அதிகாரப்பூர்வமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
21 வயதான ஜாக் டீக்ஸீரா, ஃபெடரல் நீதிபதியின் முன் நின்று கொண்டிருந்தபோது, ஒரு சிறைச் சீருடை அணிந்திருந்தார்.
இரு குற்றச்சாட்டுக்கள்
பாதுகாப்புத் தகவல்களை அனுமதியின்றிப் பரப்பிய குற்றச்சாட்டில் டீக்ஸீரா 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
மேலும், ரகசிய ஆவணங்களை அனுமதியின்றி அகற்றியதாகவும், தக்கவைத்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விமானப்படை வீரர் ஜாக் டீக்ஸீரா முதல் குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார், இரண்டாவது குற்றச்சாட்டில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
கசிந்த பெருமளவிலான ஆவணங்கள், உக்ரைனில் நடந்த போர் பற்றிய அமெரிக்க மதிப்பீடுகள் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகள் பற்றிய முக்கியமான இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளன.
இந்த கசிவுகள் வாஷிங்டனை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது மற்றும் இரகசிய தகவல்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமரிக்க அரசையும் அதன் இராஜாங்க உறவுகளையும் சங்டகப்படுத்தியதாகக் கருதப்படும் இந்த இளைஞர் மாசாச்சுசெட்ஸில் அமெரிக்க விமானப்படையின் தேசிய காவல் படையின் புலனாய்வுப் பிரிவில் தகவல் தொழில்நுட்ப நிபுணராக 2019ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், விசாரணை குறித்தோ, இரகசியங்கள் பகிரப்பட்டதன் நோக்கம் குறித்தோ அவர் வேறெந்த தகவல்களையும் தெரிவிக்கவில்லை.
கசிந்த ஆவணங்களில் இருந்த 5 முக்கியத் தகவல்கள்
1) ஐ.நா சபையின் பொதுச்செயலளர் அன்டோனியோ குட்டரெஸ் ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்யாவின் நலன்களைப் பாதுகாக்க முனைப்பு காட்டியதாக கருதிய அமெரிக்கா அணுக்கமாகக் கண்காணித்து வந்தது.
2) சீன தொலைதொடர்பு நிறுவனமான Huaweiயின் 5G திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதைப் பற்றி ஜோர்டன் நாட்டு அதிகாரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
3) உக்ரைன் போரின் பலி எண்ணிக்கையை வெளியிடுவதில் ரஷ்ய தேசிய புலனாய்வவு நிறுவனமான FSBக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே சிக்கல்கள் இருந்துள்ளன. இது ரஷ்ய இராணுவத்திலும், புலனாய்வு நிறுவனத்திலும் அமெரிக்கா எந்த அளவு ஊடுருவியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
4) பிரிட்டன், லாட்வியா, ஃப்ரான்ஸ், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் சிறப்புப் படைகள் உக்ரைனில் செயல்பட்டு வந்தன. இது உக்ரைனில் Natoவின் ஈடுபாடு இருந்ததாகக் கூறிவந்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை உறுதிசெய்வதாக அமையும்.
5) சீனா ஃபிப்ரவரியில் சோதனை முயற்சியாகத் தனது ஹைப்பர்சோனிக் ஏவுகளையைச் சோதித்தது.